சமூக விரோதிகளுக்கு ஆப்பு வைத்த குமரி காவல்துறை
சமூக விரோதிகளுக்கு ஆப்பு வைத்த குமரி காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகளில் ஈடுபடும் நபர்கள், சமூக அமைதியை கெடுக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அனைத்து காவல்நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
அதன்படி அனைத்து காவல் நிலையங்களிலும் பொது அமைதியை கெடுக்கும் கெட்ட நடத்தைகாரர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதனிடையே ஒரே நாளில் நாகர்கோவில் உட்கோட்டத்தில் 11 நபர்கள், தக்கலை உட்கோட்டத்தில் 10 நபர்கள், குளச்சல் உட்கோட்டத்தில் 04 நபர்கள், கன்னியாகுமரி உட்கோட்டத்தில் 06 நபர்கள் என 31 நபர்கள் மீது நன்னடத்தை பிணையம் பெற்று அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் கடந்த 10 நாட்களில் 48 நபர்கள் மீது நன்னடத்தை பிணையம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. குமரிமாவட்ட போலீசார் மேற்கொண்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.