வாக்கு எண்ணிக்கை மையம் அனுமதியின்றி வந்த நபர்களால் பரபரப்பு
வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் பகுதிக்கு அனுமதியின்றி வந்த தனியார் இணைய தள ஊழியர்கள்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் தற்போது நாகர்கோவில் கோணம் பகுதியில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்த வளாகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் காணப்படுவதோடு வேட்பாளர்களின் முகவர்கள் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வரும் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இணைய வசதி ஏற்படுத்துவதற்காக இணைப்பு கொடுப்பதாகக் கூறி நேற்று திங்கட்கிழமை எட்டு பேர் அங்கு சென்றிருந்தனர்.
இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்ட போது, அது குறித்து தகவல் எதுவும் தெரியாது என தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் அவர்கள் நான்கு பேருக்கு மட்டுமே மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். இணைய இணைப்பு கொடுப்பதாகக் கூறி சென்றவர்கள் மீது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் வேட்பாளர்களின் முகவர்கள் அவர்களை அனுமதிக்க மறுத்ததோடு அங்கிருந்து திருப்பி அனுப்பினர். பாதுகாப்பு நிறைந்த பகுதியில் அனுமதியின்றி தனியார் இணைய தள ஊழியர்கள் சென்ற சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முகவர்கள் தெரிவித்தனர்.