பூ வியாபாரியை பாட்டிலால் குத்திய பள்ளி மாணவர்கள் தப்பியாேட்டம்: போலீசார் விசாரணை
குமரியில் பீர் பாட்டிலால் பூ வியாபாரியை குத்திய மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் இவர் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். அண்ணா பேருந்து நிலையத்தில் ஏற்படும் தகராறுகள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள், பிரச்சனைகள் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து வந்தார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்ணா பேருந்து நிலையத்தில் பிரச்சனையில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததாகவும் அதன்படி சம்பவ இடம் வந்த போலீசார் பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை பூ வியாபாரம் விஷயமாக சென்று கொண்டு இருந்த கண்ணனை பின் தொடர்ந்த பள்ளி மாணவர்களில் ஒரு மாணவன் தான் கையுடன் கொண்டு வந்த பீர் பாட்டிலை எடுத்து கண்ணன் வயிற்றில் குத்தினார். தொடர்ந்து மாணவர்கள் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்த நிலையில் அவர்களை பின் தொடர்ந்து விரட்டிய கண்ணன் ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் விழுந்த நிலையில் அவரை மீட்ட பொதுமக்கள் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதனிடையே பூ வியாபாரி கண்ணனை பள்ளி மாணவர்கள் பீர் பாட்டிலால் குத்தும் பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த கோட்டார் போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு தப்பி ஓடிய பள்ளி மாணவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.