நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணி
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப் பணிகளுக்கான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பல சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீனாட்சிபுரம் முதல் கோட்டார் காவல் நிலைய சந்திப்பு வரையிலான சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
மேலும் சிறப்பு செயலாக்க திட்டத்தின் கீழ் ரூபாய் 10 கோடியில் பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட உள்ளதாக நாகர்கோவில் மாநகராட்சி தெரிவித்துள்ளது.