முதன்மை கல்வி அலுவலகத்தை ஓய்வு பெற்ற முதியவர்கள் முற்றுகை

நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓய்வு பெற்ற முதியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-19 01:30 GMT

கன்னியாகுமரி மாவட்ட அரசு பள்ளிகளில்,  துப்புரவு பணியாளர்களாக பணி புரிந்த பாப்பா, லட்சுமி வசந்தகுமாரி, சொக்கலிங்கம் தாமஸ், முருகன், ஜெக செல்வன் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட  அவர்கள், பகுதி நேர ஊழியர்களுக்குரிய சம்பளத்திலேயே பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கின்றனர்.

ஆனால், இவர்களைப் போன்று பணியாற்றிய பலருக்கு அரசு ஆணைப்படி முன்தேதியிட்டு, பணி வரன்முறை செய்து பண பலன்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே போன்று தங்களுக்கும் பணி வரன்முறை செய்து பண பலன்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால், மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கடந்த 28 ஆம் தேதி குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் கல்வி துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

எனினும், 20 நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், துப்புரவு பணியாளர்கள்  நேற்று, குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு திரண்டு, அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள், போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், இதனை துப்புரவு பணியாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனிடையே ஓய்வு பெற்றவர்களிடம், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News