ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

பணபலன்கள் வழங்க கோரி குமரியில் ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2021-10-28 15:00 GMT

ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றனர். இவர்கள் பணியின் போது மாத ஊதியமாக 60 ருபாய் முதல் 150 ரூபாய் வரை பெற்றனர்.

இவர்களை போன்று தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றிய சுமார் 2,000 பேரை பணி வரன்முறை செய்து முன்தேதியிட்டு சம்பள உயர்வு வழங்க அரசால் ஆணை வெளியிடப்பட்டு பணபலன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்களுக்கு இதுவரை பண பலன்கள் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, நீதிமன்றம் இவர்களுக்கான பண பலன்களை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. எனினும், இதுவரை பண பலன்கள் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், முப்பதுக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற பெண் துப்புரவு பணியாளர்கள் திடீரென நாகர்கோயிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களோடு காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படாத நிலையில், முதியவர்களான பெண்களை கைது செய்ய இயலாமல் போலீசார் திணறினர்.

இதனிடையே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் சம்பவ இடம் வந்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மூத்த தலைவருமான எம்.ஆர் காந்தியுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர், அப்போது வரும் 10 நாட்களுக்குள்ளாக முழு பலன்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது, இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News