குமரி: துறைமுகம் திட்டத்திற்கு மீண்டும் எதிர்ப்பு

சரக்குப் பெட்டக மாற்று வர்த்தகத்துறை, முதல் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் - துறைமுக எதிர்ப்பு குழு அறிவிப்பு.;

Update: 2021-03-09 16:29 GMT

கடந்த மத்திய பாஜக ஆட்சியின் போது மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சராக இருந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் பொன். இராதாகிருஷ்ணன் முயற்சியால் சரக்கு பெட்டக மாற்று துறைமுகத்திற்கான திட்டம் நிறைவேற்றப்பட்டு அதன் படி கன்னியாகுமரி அருகே கோவளம் பகுதியில் சரக்கு பெட்டகம் அமைக்க முதற்கட்ட ஆய்வு பணிகள் தொடங்கின.

ஆனால் சரக்கு பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் அமைக்க கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த மாநில அதிமுக அரசு அந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்க மறுத்தது.

இதனிடையே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரிடம் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன். இராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்தார். இந்த தோல்விக்கு, "யார் தடுத்தாலும் சரக்கு பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் திட்டம் அமைந்தே தீரும்" என திட்டவட்டமாக தெரிவித்த பொன். இராதாகிருஷ்ணனின் கருத்தே காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் இயற்கை எய்திய நிலையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலோடு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு இடை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் மீண்டும் சரக்கு பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் சுவாமி தோப்பில் நடைபெற்ற சரக்கு பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் எதிர்ப்பு குழுவினரின் ஆலோசனை கூட்டத்தில் சரக்குப் பெட்டக மாற்று வர்த்தகத்துறை முதல் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என முடிவு எடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முடிந்து போன ஒரு பிரச்சனை மீண்டும் தேர்தல் நேரத்தில் விஸ்வரூபம் எடுத்து இருப்பது கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் களத்தில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News