நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனை: ரூபாய் ஒன்றரை லட்சம் பறிமுதல்
நாகர்கோவிலில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூபாய் ஒன்றரை லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.;
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்று உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து நாகர்கோவில் அருகே இருளப்பபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்த் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணம் இன்றி ரூபாய் ஒன்றரை லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதனை நாகர்கோவில் மாநகராட்சி கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதன் மூலம் கடந்த 3 ஆம் தேதி முதல் தேர்தல் பறக்கும் படையினரால் மொத்தம் நாற்பத்தி ஏழு லட்சத்து ஆறாயிரத்து 172 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.