தமிழகத்தில் அனைத்து துறைகளுக்கான புதிய செயலி -அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

தமிழகத்தில் அனைத்து துறைகளுக்கான புதிய செயலி விரையில் தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

Update: 2022-03-28 13:30 GMT

கன்னியாகுமரியில் இரண்டு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புதிய இரண்டு வழித்தடங்களில் பேருந்து சேவையினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேருந்து சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்  கடந்த 10 ஆண்டுகளில் பல பேருந்து வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. பல்வேறு வழிதடங்களில் இயங்காமல் இருந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் துறை மற்றும் தேவசகாயம் மவுண்ட் ஆகிய இடங்களுக்கு புதிய பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைத்திடவும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திடவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வருடம் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது முழு வீழ்ச்சில் விரைவாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

தகவல் தொழில்நுட்ப சட்டம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற போதிலும் மாநில அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அதை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு, சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயலிகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News