பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு அழகு திண்ணை : மக்களை கவரும் மாநகராட்சியின் புது முயற்சி
பிளாஸ்டிக் பாட்டில் மூலம் அழகு திண்ணை ஏற்படுத்திய நாகர்கோவில் மாநகராட்சியின் புது முயற்சி பொதுமக்களை கவர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் படி, பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்ய புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் படி, 110 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு 441 பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி, மாநகராட்சிக்கு சொந்தமான வேப்பமூடு பூங்காவில் அழகான மர திண்ணை அமைக்கப்பட்டுள்ளது. கோ பிரிக் தொழில்நுட்ப முறையில் பூங்காவில் உள்ள 2 மரங்களை சுற்றி 2 அடி உயரம் 7 அடி அகலத்துடன் அமைக்கப்பட்டு உள்ள இந்த திண்ணை பூங்காவிற்கு வருபவர்களை கவரும் வகையில் அமைந்து உள்ளது.
இதனை தொடர்ந்து வரும், நாட்களில் அனைத்து மரங்களிலும் திண்ணை கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனிடையே தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு தொடர்ந்து அபராதம் விதித்து வரும், மாநகராட்சி பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தி ஒத்துழைப்பு தர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.