நாகர்கோவில் மழை நீர் தேங்கிய இடங்களை ஆய்வு செய்த மேயர்
நாகர்கோவிலில், மழை நீர் தேங்கிய இடங்களை ஆய்வு செய்த மேயரின் உத்தரவால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெய்த கனமழை காரணமாக வாத்தியார்விளை சந்திப்பு, ஜஸ்டஸ் தெரு, வெட்டூர்ணிமடம் திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. ஏற்கனவே மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் களமுனையில் அப்பகுதியில் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்களுக்கும் வாகன ஒட்டிகளும் ஆபத்து ஏற்படும் நிலை உருவானது.
மாநகர பகுதிகளில், மழை வெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்த இடங்களை மாநகராட்சி மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக நீர் வெளியேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றும் பணியை, மாநகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் மேற்கொண்டனர். இனி எப்போது மழை பெய்தாலும் மாநகரப் பகுதிகளில் மழைநீர் தேங்காத அளவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி மேயர் தெரிவித்தார்.