காதலித்து ஏமாற்றிய காதலன்: கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீருடன் இளம்பெண் தர்ணா
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பல்லடம் ராயபாளையம் அபிராமி நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரி(26), இளம் பெண்ணான இவர் வேலை பார்த்த இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அபிராம் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நட்பாக தொடங்கிய பழக்கத்திற்கு இடையே அபிராம் தனது காதலை வெளிப்படுத்த வெங்கடேஷ்வரியும் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதனிடையே வெங்கடேஷ்வரியை திருமணம் செய்வதாக கூறி மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்ற அபிராம், வெங்கடேஷ்வரியுடன் உடலுறவு கொண்டதாகவும் இதன் மூலம் வெங்கடேஸ்வரி கர்ப்பம் தரித்ததாகவும் கூறப்படுகின்றது. இதனிடையே திருமணத்திற்கு முன்னர் கற்பம் என்பது அவமானப்படுத்தி விடும் எனக்கூறி அந்த கர்ப்பத்தை கட்டாயப்படுத்தி அபிராம் அழித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெங்கடேஸ்வரியை கன்னியாகுமரிக்கு அழைத்து வந்த அபிராம் அங்கு ஒரு தனியார் ஓட்டலில் தங்கவைத்துவிட்டு பின்னர் அவரதுவீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவருடைய அப்பா, அம்மா, அக்கா ஆகியோர் வெங்கடேஸ்வரியை மிரட்டியதாகவும் தனி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேஸ்வரி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரை அபிராம் குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.
இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வெங்கடேஸ்வரி திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதோடு தன்னை கர்ப்பமாகி விட்டு தலைமறைவான குமரியை சேர்ந்த இளைஞரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்க கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இளம்பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இளம் பெண் நேற்று நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கண்ணீர் மல்க புகார் அளித்தவர் என்பது குறிப்பிட தக்கது.