குமரி: பெண் மருத்துவர் வீட்டில் 90 பவுன், ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளை
குமரியில் பெண் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 90 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் லுத்தரன் தெருவில் வசித்து வருபவர் ஜலஜா தேவக்குமார் (55). பெண் மருத்துவரான இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று இரவு பணிக்காக மருத்துவமனை சென்றுள்ளார்.
இதனிடையே பணி முடித்து வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து, அவர் நேசமணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த போலீசாரின் விசாரணையில் ஈடுப்பட்டனர். விசாரணையில் வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 90 பவுன் தங்க நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கபணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.
இக்கொள்ளை சம்பவம் குறித்து, நாகர்கோவில் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.