ஊரடங்கின் போது உடற்பயிற்சி கூடத்தில் சாராயம் விற்பனை - அலேக்காக தூக்கிய காவல்துறை.
ஊரடங்கின் போது உடற்பயிற்சி கூடத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கொரோனா பரவலை தடுக்க போடப்பட்டு உள்ள முழு ஊரடங்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முழு ஊராடங்கை பயன்படுத்தி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சி விற்பதாகவும் கள் விற்பனை நடைபெருவதாகவும் தொடர் புகார்கள் வந்தன.
இதனை தடுக்க காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இந்நிலையில் நாகர்கோவில் வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்திய சோபன் மற்றும் மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோருக்கு வடசேரி புதுக்குடியிருப்பு சுப்பையர்குளம் பகுதியில் சாராயம் காய்த்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தனி படையினர் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது அங்கு உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தை சோதனை செய்தபோது அங்கே சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெறுவதை கண்டுபிடித்தனர்.இதனை தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஜெயகுமார்(40) மற்றும் கோபால்(35) ஆகிய இருவரையும் பிடித்தனர்.
சம்பவ இடத்தில் போலீசாரிடம் இருந்து ஜெயக்குமார் தப்பி ஓடிய நிலையில் கோபாலை கைது செய்த போலீசார் சாராயம் காய்ப்பதற்கு பயன்படுத்திய ஊறல்களையும் 70 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கோபாலை சிறையில் அடைத்ததோடு தப்பி ஓடிய ஜெயகுமாரை தேடி வருகின்றனர்.