நாகர்கோவில் மாநகராட்சி மேயருக்கு அடித்தது ஜாக்பாட்

நாகர்கோவில் மாநகராட்சி மேயருக்கு அடித்தது ஜாக்பாட்.

Update: 2022-03-04 16:00 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் நகராட்சியாக இருந்து கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்படி கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 52 வார்டுகளை கொண்ட நாகர்கோவில் மாநகராட்சியின் வார்டு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலின் படி நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் ஆக திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மகேஷ் தேர்வு செய்யப்பட்டார். மேலும் துணை மேயராக திமுகவை சேர்ந்த மேரி பிரின்சி லதா தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் ஏற்கனவே இருந்த திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்த சில மணி நேரத்திலேயே கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த சுரேஷ் ராஜன் மாற்றப்பட்டு நாகர்கோவில் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்ற வழக்கறிஞர் மகேஷ் புதிய கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து படிப்படியாக முன்னேறி திமுகவின் நாகர்கோவில் மாநகர செயலாளராக இருந்து வந்த வழக்கறிஞர் மகேஷ் மேயராக பதவி ஏற்ற சில மணிநேரத்திலேயே திமுகவின் மாவட்ட செயலாளராகவும் பதவி ஏற்று இருப்பது அவருக்கு அடித்த ஜாக்பாட்டாக கருதப்படுகின்றது. இதனிடையே திமுக மாவட்ட செயலாளர் மாற்றப்பட்டது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள திமுகவினர் இனி கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் என தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News