3-ம் நிலை நகரங்களில் தொழில் பூங்கா- அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
3-ம் நிலை நகரங்களில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் லெமோரியா தற்காப்பு கலை என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட தமிழக அளவிலான அடிமுறை சிலம்பம் போட்டியினை தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காப்பு கலைகள் உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தற்காப்பு கலைகள் முந்தைய காலகட்டத்தில் போர்க் கலையாக இருந்தது. எனவே மறைந்து போன அனைத்து பாரம்பரிய கலைகளையும் மீட்டெடுப்பதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ் இணைய கல்விக் கழகம் வாயிலாக முந்தைய தற்காப்புக் கலைகளை பாரம்பரிய மருத்துவம் குறித்த ஓலைச்சுவடிகளின் ஆவணங்கள் மூலம் பாதுகாத்து அதனை இளைய தலைமுறையினர் கற்று தெரிந்து கொள்ள மின்னணு வாக்கம் செய்யப்பட்டு விவரங்கள் பாதுகாக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறையினர் வெளிகொண்டு வரும் வகையில் வழிவகை செய்யப்பட உள்ளது.
மேலும் குமரி மாவட்டத்தில் ஜனநாயகம் தான் இருக்கிறது, பணநாயகம் வரவில்லை பணநாயகத்தை வர விடமாட்டோம் எனவும், தமிழ்நாட்டில் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் தொழில் பூங்கா தொடங்கி பல்வேறு கம்பெனிகளை கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது அரசின் தீர்க்கமான முடிவு அதற்கான முயற்சியில் உடனடியாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி மூலம் விரைவில் வேலை வாய்ப்புகளை முதல்வர் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.