குமரியில் கால்வாய் உடைந்து கிராமத்திற்குள் புகுந்த வெள்ளம்

குமரியில் கால்வாய் உடைந்து கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் 65 வீடுகள் 22 நாட்களாக தண்ணீரில் மிதக்கிறது.

Update: 2021-12-01 15:45 GMT

குமரியில் பாய்ந்தோடும் வெள்ளநீர்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது, கடந்த 22-நாட்களுக்கு முன் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தொடர்ந்து 5-நாட்கள் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்நிலையில் நீர் நிலைகள் நிரம்பியதோடு அணைகளும் வேகமாக நிரம்பியது, இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, பெய்கை அணை போன்ற அணைகளில் இருந்து சுமார் 47000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டன.

இதன் காரணமாக குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு 60 க்கும் மேற்பட்ட கிராமங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளை நிலங்களில் காட்டாற்று வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பெரும் பாதிப்பை சந்தித்தது, இந்நிலையில் அணைகளில் இருந்து திறந்த தண்ணீராலும், கனமழையாலும் நாகர்கோவில் மாநகர் பகுதியில் அமைந்துள்ள முக்கிய ஆறான ஆசாரிப்பள்ளம் அனந்தன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள அம்மன் குடியிருப்பு பகுதியில் புகுந்தது, இந்நிலையில் உடைப்பு இதுவரை சரி செய்யப்படாததால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி அம்மன் குடியிருப்பு பகுதிகளை முற்றிலுமாக சூழ்ந்தது.

இதன் காரணமாக அங்குள்ள சுமார் 65க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதந்து வருகின்றன, அங்கிருக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே வந்து பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளுக்கும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதி மக்கள் மன வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் சுமார் 22 நாட்களுக்கு மேலாக சுமார் தண்ணீர் கட்டுபட்டு இருப்பதால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே போர்கால அடிப்படையில் குடியிருப்பை சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News