கனமழையுடன் கூடிய சூறை காற்று - வேரோடு சாய்ந்த மரங்கள்
குமரியில் கனமழையுடன் கூடிய சூறை காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில் வீடுகளும் இடிந்தன.;
கன்னியாகுமரியில் பெய்த கன மழையில் வேரோடு சாய்ந்த மரம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடங்கி விடிய விடிய பெய்த கனமழை பகலிலும் தொடர்ந்து நீடித்து வருகிறது, சுமார் 16 மணி நேரங்களை கடந்து பெய்து வரும் இந்த கனமழையின் காரணமாக மேற்கு மாவட்ட மலையோர பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்நிலையில் கன மழையுடன் சூறைக் காற்றும் வீசியதால் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பூங்காவில் இருந்த பெரிய மரம் உட்பட 3 மரங்கள் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தன.
பொதுவாக அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் ஆனால் இன்று சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விடுமுறை நாள் என்பதால் அங்கு வாகனங்கள், ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் இல்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும் கனமழை காரணமாக நாகர்கோவில் பாறைக்கால் மடம் பகுதியை சேர்ந்த கோசலா என்ற மூதாட்டியின் வீடும் இடிந்து விழுந்தது, அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் பாதிப்பு இல்லை.