குமரியில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் கிராமம்; தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்
நாகர்கோவில் கோதை கிராமம் பகுதியில் மழை வெள்ளம் புகுந்ததில் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மாவட்டம் இதுவரை காணாத அளவில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இதேபோன்று மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து நீடித்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதன் காரணமாக அணைகளில் இருந்து சுமார் 23 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அந்தக் குளங்களில் இருந்து நீர் வெளியேறுவதால் மாவட்டத்தில் சுமார் 17 கிராமங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
நாகர்கோவிலில் உள்ள கோதை கிராமம் பகுதியில் மழை வெள்ளம் புகுந்ததில் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. முழுவதுமாக வெள்ளம் சூழ்ந்துள்ள இப்பகுதியில் காலையிலிருந்து பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில் இப்பகுதி மக்களை மீட்க மாவட்ட நிர்வாகமும் அரசும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதேபோன்று இப்பகுதியில் 5 க்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தில் சரிந்து உள்ளன.