அரசு விழாவாக கொண்டாடப்பட்ட மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணியின் பிறந்தநாள்
குமரியின் தந்தை என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக வேப்பமூடு பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.;
கன்னியாகுமரி மாவட்டம் பண்டைய கொச்சி சமஸ்தானத்துடன் இணைந்திருந்த போது தமிழ் மொழி பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி, பேச்சுரிமை உள்ளிட்டவை மறுக்கப்பட்டது.
இதனால் கன்னியாகுமரி மாவட்டம், நெய்யாற்றின்கரை தாலுகா, செங்கோட்டை தாலுகா, தேவிகுளம், பீர்மீடு தாலுகா உள்ளிட்ட பகுதிகளை தாய் தமிழகத்துடன் இணைக்க மார்ஷல் நேசமணி தலைமையில் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் மலையாள போலீசின் துப்பாக்கி சூடு, தடியடி உள்ளிட்டவற்றால் பலர் உயிரிழந்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பின், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்களில் முக்கியமானவர் நேசமணி. குமரி மாவட்ட மக்களின் அன்போடு குமரியின் தந்தை என அழைக்கப்படும் மார்சல் நேசமணி அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேசமணியின் 127 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் உள்ளிட்டோர் நேசமணியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் மொழிப்போர் தியாகிகள் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.