குமரியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் - போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன
கன்னியாகுமரியில், இந்து முன்னணி சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் விசர்ஜனம் செய்யப்பட்டன.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வீடுகள், வீதிகள், கோவில்கள் என பல்வேறு இடங்களில் 3 அடி முதல் 12 அடி வரையிலான பல ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அதனை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இந்த வருடம், கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், அதனை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும், அரசு தடை விதித்தது. இதனால், குமரியில் நூற்றுக்கும் குறைவான இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
அதன்படி, குமரி மாவட்டம் முழுவதும் இந்து முன்னணியினர், அவர்கள் வீடுகளில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளை போலீஸ் பாதுகாப்புடன் அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்தனர். கொரோனா நோய் தொற்று முழுவதுமாக இல்லாமல் போவதோடு மக்கள் அனைவரும் நோயின்றி மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்தனை செய்த இந்து முன்னணியினர், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்தனர்.