குமரி பழையாற்றில் வெள்ளப்பெருக்கு: நாகர்கோவில் - நெல்லை பாேக்குவரத்து நிறுத்தம்

குளங்கள் உடைப்பு, வெள்ளப்பெருக்கால் நாகர்கோவில் - நெல்லை சாலையை மழை வெள்ளம் ஆக்கிரமித்த நிலையில் போக்குவரத்து நிறுத்தம்.

Update: 2021-11-13 14:15 GMT

நாகர்கோவில் பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒழுகினசேரி சாலை நீரில் மூழ்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மதுரை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது ஒழுகினசேரி சாலை.

இந்த சாலை வழியாக மட்டுமே மாநிலத்திற்கு அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து நடைபெறும் என்ற நிலையில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழையால் பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஆற்றில் இருந்து வெளியேறிய மழை நீரானது பிரதான சாலையான ஒழுகினசேரி சாலையை ஆக்கிரமித்ததால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகின்றது.

இடுப்பளவு தேங்கி நிற்கும் தண்ணீர் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும் நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் அஞ்சு கிராமம் வழியாக இயக்கப்பட்டன.

இதேபோன்று சாலையில் புகுந்துள்ள மழை வெள்ளத்தில் கார்கள், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சிக்கி தவித்தன. பெரும்பாலான வாகனங்களில் தண்ணீர் புகுந்து வாகனங்களும் பழுதாகி உள்ளன.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் முகாமிட்டு வெள்ளத்தில் சிக்கிய நபர்களை வெளியேற்றி கரை சேர்த்தனர்.

Tags:    

Similar News