குமரியில் விவசாய சங்கத்தினர் மறியல்: ஏராளமானோர் கைது

குமரியில் விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நூற்றிற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-01-06 00:30 GMT

மறியலில் ஈடுபட்ட விவசாயிகள். 

மழை வெள்ள நிவாரணத்திற்கு தமிழக அரசு கோரியுள்ள நிதியை, மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும், கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும். மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கும் ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து நீர்நிலைகளையும் முழுமையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், நேற்று காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ரவி, மாநில துணைச் செயலாளர் முத்துராமு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் பலர் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

இதனிடையே இவர்கள் திடீரென கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு, தரையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் நூற்றிற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News