திமுக அரசு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிரானது: அண்ணாமலை விமர்சனம்.
திமுக அரசு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிரானது என குமரி வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்;
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர் அண்ணாமலை
வரலாறு காணாத கனமழை காரணமாக இது வரை சந்திக்காத பெரிய இழப்பை சந்தித்த கன்னியாகுமரி மாவட்டம் தற்போது சகஜ நிலை திரும்பி வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தோவாளை பகுதியில் உள்ள இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பாஜக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் 1 ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறிய ஸ்டாலின் தற்போது முதலமைச்சராக ஆன பின்னர் ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன் இது குறித்து சுகாதார துறை அமைச்சர் உதவி தொகையை அண்ணாமலையிடன் கேளுங்கள் என கூறுகிறார். மக்கள் மீதும் விவசாயிகள் மீதும் அக்கறை காட்டாத அரசாக திமுக அரசு உள்ளது. இதனை எதிர்த்து பாஜக சார்பில் சென்னையில் 11 இடங்களில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.