மாநகராட்சி புதிய கட்டட பணிக்கு ஆக்கிரமிப்பை தடுக்க கோரிக்கை
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக புதிய கட்டிட பணிக்காக விளையாட்டு அரங்கம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.;
அண்ணா விளையாட்டு அரங்கு வாயிலில் ஆய்வு செய்யும் கட்டுமான அதிகாரிகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கலைவாணர் கலையரங்கம் இடிக்கப்பட்டு மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணி ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
தற்போது இதன் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேயர், ஆணையர் மற்றும் பொதுமக்கள் நுழையும் வகையில் 3 வாயில்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக, அருகில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்க பாதையை ஆக்ரமிக்க முயல்வதாக புகார் எழுந்தது.
ஏற்கனவே விளையாட்டு அரங்குகள் அமைக்க இடம் பற்றாக்குறை உள்ள நிலையில் விளையாட்டரங்கின் தெற்கு வாயில் வழியாகத்தான், தண்ணீர் நிரப்பும் வாகனங்கள், முக்கிய விஐபிக்கள் வரும் வாகனங்கள் வர முடியும்.
தற்போது மாநகராட்சி அலுவலக பணிக்காக இடம் ஆக்கிரமிக்கப்பட்டால் விளையாட்டு அரங்கம் பணிகள் பாதிக்கப்படுவதோடு பார்வையாளர்கள் கேலரியும் பாதிக்கப்படும் என விளையாட்டரங்க நல சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து முதல்வருக்கு புகார் அனுப்பப்பட்ட நிலையில் அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.