மும்மத வழிபாட்டு தலங்களை சுத்தம் செய்த மாநகராட்சி
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மும்மத வழிபாட்டு தலங்களை கிருமி நாசினியால் சுத்தம் செய்த மாநகராட்சி;
தமிழக அரசின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் இன்று முதல் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், புனித சவேரியார் பேராலயம், ஜும் ஆ பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு வழிபாடு செய்வதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன. பிற்பகல் நடை அடைக்கப்பட்ட பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நாகராஜா கோவில் உள்ளிட்ட இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் அனைத்தும் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்டது.
இதன் மூலம் நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும் என்ற நிலையில் மாநகராட்சியின் இந்த பணி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.