ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் கொரோனா சிகிச்சை
நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 200-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆசாரிபள்ளம் மெடிக்கல் காலேஜ் தவிர கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கல்வி நிறுவனங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன.
மேலும் நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு மொத்தம் 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஆயுர்வேத அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் மொத்தம் 158 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதில் 80 பேர் குணமடைந்ததை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்றைய நிலவரப்படி 78 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 12 பேர் சிறுவர், சிறுமிகள் ஆவர்.
நோயாளிகளுக்கு மருத்துவமனை டீன் டாக்டர்.கிளாரன்ஸ் டெவி மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இங்கு 30 கொரோனா நோயாளிகளுக்கு முற்றிலும் ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவர்களுக்கு தினமும் மூலிகை கஞ்சி, கசமூல கடுத்திரேயம், வில்வாதி மாத்திரை, சுதர்சனம் மாத்திரை, திரிபலா சூர்ணம் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் காலையும், மாலையும் ஆவி பிடிக்கவும் வைக்கிறார்கள். மீதமுள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருத்துவத்துடன் ஆங்கில மருத்துவமும் அளிக்கப்படுகிறது.