தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பெரும் தொற்றால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் குஜராத்தில் இருந்து கேரளா செல்வதற்காக நாகர்கோவிலுக்கு வந்த பாரத் தர்ஷன் என்ற ரயிலில் பயணம் செய்த மூதாட்டி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
இதனால் ரயிலில் உடன் பயணித்த 56 பயணிகளை சோதனை செய்ததில் 10 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொற்று உறுதி செய்யபட்டவர்கள் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் அவர்கள் பயணம் செய்த ரயிலை மீண்டும் குஜராத்துக்கே திருப்பி அனுப்ப தென்னக ரயில்வே நடவடிக்கை எடுத்து உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.