சாலையோர வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை -நாகர்கோவில் மாநகராட்சி ஏற்பாடு
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து தற்போது குறைந்து வரும் நிலையில் நோய் தொற்று பரவல் இல்லாத மாவட்டத்தை உருவாக்க மாவட்ட நிர்வாகமும் நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் படி நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது, மேலும் மாநகரம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணிகள் மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி ஆரம்ப சுகாதார நிலையம் பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் வீதி வீதியாக சென்று நடைபாதை வியாபாரிகளுக்கு சளி மாதிரிகளை சேகரித்தனர். நோய் தொற்று இல்லா மாவட்டத்தை உருவாக்கும் வகையில் நடைபெறும் மாநகராட்சியின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.