குமரி மாவட்டத்தில் 555 மையங்களில் முகாம்: 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் 555 மையங்களில் நடைபெற்ற முகாம் மூலம் 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் பொது சுகாதாரதுறையின் கீழ் ஏழாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் 555 பகுதிகளில் நடைபெற்றது.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தாத பொதுமக்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் மக்களை தேடி தடுப்பூசி என்ற நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் சுகாதார துறையினர் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக கொரோனா தடுப்பூசி முகாமினை நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் 105 மையங்களிலும், மாவட்டத்தின் இதர பகுதிகளில் 450 மையங்கள் என ஆக மொத்தம் 555 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.