தசை சிதைவு நோயினால் 8 வருடங்களாக முடங்கிய சகோதரர்கள்: அரசு உதவி செய்யுமா?
குமரியில் மரபியல் சார்ந்த தசை சிதைவு நோயினால் 8 வருடங்களாக முடங்கிய சகோதரர்கள் அரசு உதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.;
நாகர்கோவில் அருகுவிளை பகுதியில் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 8 வருடங்களாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சகோதரர்கள் மூர்த்தி மற்றும் கிருஷ்ணன்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகுவிளை பகுதியை சேர்ந்தவர்கள் அண்ணன், தம்பிகளான மூர்த்தி மற்றும் கிருஷ்ணன், இவர்கள் இருவரும் மஸ்குலர் டிஸ்ராபி என்ற மரபியல் சார்ந்த தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 8 வருடங்களாக வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
மற்ற இளைஞர்களை போல ஓட முடியா விட்டாலும் பரவா இல்லை ஆனால் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் தவித்து வரும் இரு இளைஞர்களும், தங்களுடைய சுய தேவைகளான கழிவறைக்கு செல்லுதல் வீட்டிற்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லுதல் என எந்த பணியையும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த இரு இளைஞர்களையும் அவர்களின் சகோதரியான முத்துலட்சுமி என்ற இளம்பெண்ணே கவனித்து வருகிறார், கடைகள் மற்றும் அலுவலகங்களில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு சென்றால் சமயத்திற்கு தம்பிகளை கவனிக்க முடியாது என்பதால் மாலை வரை வேலை செய்யும் அளவிற்கு எந்த வேலை கிடைக்கிறதோ அந்த வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தம்பிகளை கவனித்து வருகிறார்.
இதனிடையே முத்துலட்சுமி கூறும்போது கடவுள் புண்ணியத்தில் உணவிற்கும் பஞ்சம் இல்லை என்றாலும் எங்களது ஏழ்மை வறுமை போன்றவை தம்பிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்கு தள்ளி விட்டு இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தனது தம்பிகள் இருவரும் எழுந்து நடக்க வேண்டும் இதுவே என் ஆசை, எனது ஆசை மட்டும் அல்ல என் தம்பிகளின் ஆசையும் அதுதான் என கூறும் முத்து லெட்சுமி சரியான சிகிச்சை அளித்தால் தனது தம்பிகள் இருவரும் எழுந்து நடப்பார்கள் என்றும் இதற்கு தமிழக அரசு தயவுகூர்ந்து மருத்துவ உதவியை செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.