இருசக்கர வாகன ஒட்டியை சுற்றி வளைத்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்
குமரியில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருசக்கர வாகன ஒட்டியை ஆட்டோ ஓட்டுநர்கள் சுற்றி வளைத்து தாக்கினர்.;
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் அனுமதி இன்றி ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆட்டோ ஸ்டாண்ட் திமுக ஆதரவு கொண்டது என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே இந்த ஆட்டோ ஸ்டாண்ட் அருகே உள்ள கடையில் பொருட்கள் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டி ஒருவர், அங்கே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு செல்ல முயன்றார்.
அப்போது அந்த வாகன ஓட்டியிடம் இருசக்கர வாகனத்தை இங்கே விடக்கூடாது என ஆட்டோ ஓட்டுனர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் இருசக்கர வாகன ஓட்டுனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாய் தகராறு முற்றிய நிலையில், அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து இருசக்கர வாகன ஓட்டியை ஆபாச வார்த்தைகளால் திட்டி அவரை காலால் எட்டி உதைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களில் ஒருவரால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.