குமரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

கணவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் குமரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார்.

Update: 2021-09-27 14:00 GMT

தீக்குளிக்க முயற்சித்த மகாதேவி.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் ராஜகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சேசு ராஜன், இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அதனை மறைத்து அஞ்சுகிராமம் அருகே சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த மகாதேவி (37) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில் மகாதேவியை நாகர்கோவிலில் வாடகை வீட்டில் தங்க வைத்த சேசு ராஜன் அதன் பின்னர் இவர்களை கவனிக்காமல் விட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவரைத் தேடி அஞ்சுகிராமம் சென்ற மகாதேவிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தன்னுடைய கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதும் அவர்களுக்கு குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து ஜேசுராஜனிடம் கேட்டபோது 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கொண்டுவந்தால் மட்டுமே உன்னை வைத்து வாழ முடியும் என கூறி வீட்டிற்கு வாடகை கொடுக்காமல் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் மகா தேவியையும் குழந்தையையும் நடுத்தெருவில் விட்டதாக தெரிகிறது.

இதனிடையே முதல் திருமணத்தை மறைத்து தன்னை ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகர்கோவிலில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மகாதேவி 11 முறை புகார் அளித்தும் 63 முறை காவல் நிலையம் சென்று முறையிட்டும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் விரக்தி அடைந்த மகாதேவி நீதி கேட்டு நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்தார்.

இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மகா தேவியை தடுத்து நிறுத்தி காப்பாறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மகாதேவியிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News