"அடிப்படை வசதி, இரண்டு வேளை உணவு" கேட்டு கோரிக்கை..!
- மாற்று திறனாளி உண்ணாவிரத போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் வீராணம் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் வள்ளிநாயகம் மாற்றுத்திறனாளியான இவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து அலுவலக வாயிலில் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.
தினமும் கிடைக்கும் வேலைகளை செய்தும், அரசு அலுவலகங்கள் முன்பு பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்தும் வாழ்க்கை நடத்தி வரும் மாற்று திறனாளிகள் இந்த முழு ஊராடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாகவும், தளர்வுகள் இல்லாத முழு ஊராடங்கால் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் வாழும் மாற்று திறனாளிகளை அரசு கண்டு கொள்ளாத நிலையில் அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் கோரிக்கையை வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.
இந்நிலையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள போலீசார் தடை விதித்தனர் இந்நிலையில் தனது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்த வள்ளிநாயகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.
முழு ஊராடங்கால் மாற்று திறனாளிகள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் நாங்களும் மனிதர்கள்தான் என்பதை ஆளும் அரசு மறந்து விட்டதாகவும் தங்கள் தள்ளு வண்டி பழுதானால் கூட அதனை சரிசெய்ய இயலாத நிலையில் மாற்று திறனாளிகளுக்கு தனியார் இலவசமாக கொடுக்கும் உணவுகள் கூட கிடைக்காத நிலை உள்ளது என்றும் கூறினார்.
மேலும் மாற்று திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மாற்று திறனாளிகள் அலுவலகம் மூலம் இரண்டு வேளை உணவு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் மேற்கொள்வதாகவும் இது நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
உணவு மற்றும் அடிப்படை தேவைக்காக மாற்று திறனாளி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.