அதிமுகவை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது -ஓ.பி.எஸ்
திமுக கொடுத்த பொங்கல் அரிசியை மாட்டிற்கு வைத்தால் மாடு நம்மை முறைத்து பார்க்கிறது -ஓ.பி.எஸ் தேர்தல் பரப்புரை;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
அப்போது தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 19 கூட்டங்கள் நடைபெற்று உள்ளன, அனைத்து கூட்டத்திலும் மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூட்டத்தை பார்த்தால் நாகர்கோவில் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட 999 வார்டுகளிலும் உள்ள அனைத்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது.
புரட்சி தலைவர் 1972 ல் அதிமுகவை தோற்றுவித்து 10 ஆண்டு காலம் தொடர்ந்து முதலமைச்சராக இருந்து சத்துணவு உள்ளிட்ட சரித்திர திட்டங்களை கொண்டு வந்தார். ஜெயலலிதா 16 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து மக்கள் நல திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் ஆட்சி செய்தார், 4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்து பல திட்டங்களை செயல்படுத்தினார்.
30 ஆண்டு காலம் மக்களிடையே செல்வாக்கை பெற்று உள்ள ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான், ஜெயலலிதா அதிமுகவில் பொறுப்பேற்ற நாள் முதல் சொல்ல முடியாத அளவிற்கு துன்பங்களை அனுபவித்து இன்று அதிமுகவை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக மாற்றியது ஜெயலலிதா தான்.
விலை இல்லாத அரிசியை ஏழைகளுக்கு வழங்கினார், தரமான உறுதியான வீடுகளை கட்டி கொடுத்தார்கள், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் தமிழக மக்களுக்கு கிடைக்க உறுதி செய்தவர் ஜெயலலிதா.
பெண்கள் நாட்டின் கண்கள் என பெண் கல்வியை ஊக்குவித்து உதவி தொகை வழங்கியது அதிமுக, ஏழைகளுக்கும் கைத்தறி நேசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு. அதிமுக அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை 52 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது. அதிமுக அரசால் தமிழகம் நெல் உற்பத்தியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது, மக்களுக்கு எது தேவை என்பதை பார்த்து பார்த்து ஜெயலலிதா வாரி வாரி வழங்கினார்கள். திமுக 505 பொய்யான வாக்குறுதிகளை திரும்ப திரும்ப சொல்லி மக்களை நம்ப வைத்து நம்பிய மக்களுக்கு நாமத்தை போட்டது.
நீட் தேர்வு ரத்து செய்ய பல விதிமுறைகள் உள்ளன, ஸ்டாலின் வீட்டில் இருந்து கையெழுத்து போட்டு கொண்டு இருந்தால் நீட் தேர்வு ரத்து ஆகாது. தமிழகத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிற திட்டங்கள் அனைத்தும் அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம், திமுக அரசில் தற்போது குழப்பம் மட்டுமே உள்ளது, திமுக அரசு சொன்ன வார்த்தைகளை காப்பாற்ற முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
திமுக கொடுத்த பொங்கல் அரிசியை மாட்டிற்கு வைத்தால் மாடு நம்மை பார்த்து முறைக்குது, பொங்கல் பரிசு மூலம் விஞ்ஞான ரீதியிலான ஊழலை செய்துள்ளது திமுக அரசு. நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெற்று வந்த உரிமையில் பாதிப்பு வரும் போது அந்த உரிமையை காக்கும் அரணாக ஜெயலலிதா இருந்தார்கள்.
காவிரி பிரச்சனையில் சட்ட போராட்டம் நடத்தி உரிமையை பெற்று தந்தவர் தான் ஜெயலலிதா, தஞ்சையில் விவசாயிகள் சேற்றில் கைவைத்தால்தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும் என கூறியவர் ஜெயலலிதா. அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் நிச்சயமாக ஜெயிக்க போவது அதிமுக அரசுதான், அம்மாவின் அரசுக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர், அதிமுக வினர் கொடுத்து பழக்கப்பட்டவர்கள், திமுகவினர் எடுத்து பழக்கப்பட்டவர்கள் என பேசினார்.