தாமரை மலர்ந்தே தீரும் - நடிகர் செந்தில்
பிரபல திரைப்பட நடிகர் செந்தில் கன்யாகுமரியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
பிரபல திரைப்பட நடிகர் செந்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி, கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடை தேர்தல் வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, இப்போது இருக்கும் காங்கிரஸ் பழைய காங்கிரஸ் அல்ல. இவர்கள் தோற்றாலும் அடித்துக் கொள்வார்கள். ஜெயித்தாலும் அடித்துக் கொள்வார்கள். கடந்த முறை மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் இரட்டை ரயில் பாதை, நான்குவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்தார். அவற்றை காங்கிரஸார் நடக்கவிடாமல் செய்துவிட்டனர்.
கடந்த முறை தவறான நபரை தேர்வு செய்ததால் இந்த திட்டங்கள் யாவும் மீண்டும் செயல்படுத்த முடியாமல் கிடப்பில் உள்ளது. எனவே இந்த முறையாவது சரியான ஆளான பொன்.ராதாகிருஷ்ணனை தேர்வு செய்யுங்கள். இதனால் கிடப்பில் கிடக்கும் இரட்டை ரயில் பாதை திட்டம், நான்கு வழிச்சாலை திட்டம் உள்ளிட்டவற்றை அவர் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்.
சிலருக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் நன்றாக இருந்தால் பிடிக்காது. எனவே அது சரியில்லை இது வந்தால் நல்லா இருக்காது என்று கூறி கலகத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுவிடுவார்கள். அதே போல தான் சில கட்சியினர் எந்த நல்ல திட்டம் கொண்டுவந்தாலும் வேண்டாம் என்று போராடி வருகின்றனர்.
தாமரை மலர்ந்தால் தான் நமது சந்ததியினர் நன்றாக இருப்பார்கள். எனவே உங்களது வாக்குகளை தாமரைக்கு தாருங்கள் என பேசினார்.