விவேகானந்தர் மண்டபத்தை 6 நாட்களில் 50 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்
Vivekananda Mandapam -கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தை 6 நாட்களில் 50 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.;
Vivekananda Mandapam -விவேகானந்தர் நினைவு மண்டபம் தமிழ்நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையின் மேல் அமைந்துள்ளது. சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். எனவே அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது. இப்பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அம்மன் பாதக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தினுள் விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பின் பகுதியில் மண்டபத்தின் கீழே ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் விவேகானந்தர் பாறை முக்கியமானது. இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் இருந்து இங்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து விட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்வார்கள். பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிடுகிறார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு சேவை தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை உண்டு.
தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதோடு ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை என்பதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. தற்போது கடலில் உள்ள திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி நடந்துவருகிறது. திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடக்கிறது .அதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர். கடந்த 1-ந் தேதி 7 ஆயிரத்து600சுற்றுலா பயணிகளும், 2-ந் தேதி 9 ஆயிரத்து 800, 3-ந் தேதி 9 ஆயிரத்து 400, 4-ந் தேதி 9 ஆயிரத்து 800, 5-ந் தேதி 4 ஆயிரத்து 750, 6-ந் தேதி 9 ஆயிரம் என 6நாட்களில் 50 ஆயிரத்து 350 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2