நாகர்கோவிலில் பணம் பட்டுவாடா: கட்சியினர் சிக்கினர் - 2 லட்சம் பறிமுதல்
நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனையில் பணம் பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டு இருந்த 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.;
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 55 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்று, இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.
இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக துண்டுப்பிரசுரம் விநியோகித்த சிலர், பணம் பட்டுவாடாவிலும் ஈடுபட்டனர். நாகர்கோவில் மாநகராட்சி 12 வது வார்டில் திமுகவிற்கு ஆதரவாக துண்டு பிரசுரம் வினியோகம் செய்த 3 பேரை பொதுமக்கள் பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். இதில் பணம் விநியோகம் செய்தவர் பணத்துடன் தப்பி ஓடிய நிலையில், மீதமுள்ள இருவர் மட்டும் பிடிபட்டு உள்ளார்.
இதேபோன்று அனந்தம் பாலம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த மூன்று பேர் தேர்தல் அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடிய நிலையில், அவர்களில் இருவரை பிடித்த தேர்தல் அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூபாய் 49 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். பெண் வேட்பாளரின் கணவர் தப்பியோடிய நிலையில் அவரை தேடி வருகின்றனர். இதேபோன்று இருளப்பபுரம் பகுதியில் பணம் பட்டுவாடாவில் ஈடுபட்ட திமுக பிரமுகரிடம் இருந்து ரூபாய் 49 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.