கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் புரவசேரி பகுதியை அடுத்த பழையாற்றின் கரையில் சாராயம் காய்ச்சி வடிப்பதாகவும் அப்பகுதிக்கு ஆற்றில் குளிக்க வருவது போல் வரும் பலர் சாராயம் குடித்து செல்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து கோட்டார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் தலைமையிலான தனிப்படை போலீசார் சாராய வடிப்பு மற்றும் குடிமகன்களின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் பழையாற்றங்கரையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் 5 லிட்டர் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் சாராய ஊறலையும் பறிமுதல் செய்து சாராய உற்பத்தியில் ஈடுபட்ட தக்கலையை அடுத்த ஈத்தவிளை பகுதியை சேர்ந்த ராபின்சன் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.