ராகுல் காந்தி மறந்தார்: அமித்ஷா செய்தார்
ராகுல் காந்தி மறந்த காமராஜருக்கு மரியாதை செலுத்திய அரசியல் சாணக்கியன் அமித்ஷா.;
நாடார் சமுதாய மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று, சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் வெற்றியை உறுதி செய்யும் மிகப்பெரிய சக்தியாகவும் நாடார் சமுதாய வாக்குகள் உள்ளன.
அதேபோன்று கேரளாவில் அடிமைப்பட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்கும் மொழிப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியதில் நாடார் சமுதாய மக்களின் பங்களிப்பு அளப்பரியது, குறிப்பாக குஞ்சன் நாடார், மார்ஷல் நேசமணி நாடார் உள்ளிட்ட பல்வேறு நாடார் சமுதாய தலைவர்கள் மொழிப்போர் விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி உள்ளார்கள். நாடார் சமுதாய மக்களின் தலைவராக போற்றப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜருக்கு நாகர்கோவில் மாநகரின் மத்திய பகுதியான வேப்பமூடு சந்திப்பில் முழு உருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வரும் எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் வரலாற்று பெருமை கொண்ட இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னரே தங்களது பணிகளை தொடங்குவார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாகர்கோவில் வந்த நிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தாமல் சென்றார். காங்கிரஸ் கட்சியை பட்டி தொட்டி எங்கும் வளர்த்த காமராஜருக்கு மரியாதை செலுத்தாமல் ராகுல் காந்தி சென்றது காங்கிரசார் மத்தியிலும் நாடார் சமுதாய மக்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு கூடிநின்ற ஆயிரக்கணக்கான பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கையசைத்து கோஷங்கள் எழுப்பி, தனது மகிழ்ச்சியை பயன்படுத்திய அமைச்சா் சில நிமிடங்கள் அங்கேயே இருந்து காமராஜரை பார்த்து கொண்டே இருந்தார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் இந்து நாடார் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். இராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அமித்ஷாவின் செயல் அப் பகுதியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ராகுல்காந்தி காமராஜரை மறந்து சென்ற நிலையில் அரசியல் சாணக்கியன் என்று அழைக்கப்படும் அமித்ஷா காமராஜரை வணங்கி மாலை அணிவித்து மரியாதை செய்தது அரசியல் தந்திரமாகவே பார்க்கப்படுகிறது.