நாகர்கோவிலில் அமித்ஷாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு

சாலையின் இருபுறமும் கூடி நின்ற ஆயிரக்கணக்கான மக்களின் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்றுக்கொண்ட அமித்ஷா தனது வாகனத்தில் இருந்த ரோஜா மலர்களை மக்கள் மீது தூவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Update: 2021-03-07 15:15 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற வெற்றிக் கொடி ஏந்தி வெல்வோம் என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்து கொண்டு மக்களை சந்தித்தார். நாகர்கோவில் மாநகரின் மிக முக்கிய பகுதியான செட்டிகுளம் சந்திப்பு முதல் வேப்பமூடு சந்திப்பு வரையிலான சாலையில் இந்த மக்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் படி சுசீந்திரம் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த அமித்ஷா அங்கிருந்து நாகர்கோவில் வந்தார். செட்டிக்குளம் சந்திப்பில் இருந்து திறந்த வாகனத்தில் ஏறிய அமித்ஷா சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக திறந்த வாகனத்தில் நின்றவாறு மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். இடையிடையே சாலையின் இருபுறமும் கூடி நின்ற ஆயிரக்கணக்கான மக்களின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்றுக்கொண்ட அமித்ஷா, தனது வாகனத்தில் இருந்த ரோஜா மலர்களை மக்கள் மீது தூவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

முன்னதாக செட்டிகுளத்தில் இருந்து வேப்பம்பட்டு வரை நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏராளமான நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய மேளதாளங்கள் இடம் பெற்றிருந்தன. பொதுவாக செட்டிகுளம் சந்திப்பு முதல் வேப்பமூடு சந்திப்பு வரை செல்ல உள்ள ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலையை கடக்க 5 நிமிடங்களே ஆகும் என்ற நிலையில் மக்கள் வெள்ளத்தில் அந்த சாலையை அமித் ஷாவின் வாகனம் கடக்க இரண்டு மணி நேரம் ஆகியது.

இதனைத் தொடர்ந்து வேப்பமூடு சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமித்ஷா அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களைப் பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Tags:    

Similar News