தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் ஆகியவை வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் அதிக அளவில் வாக்காளர்களை வாக்களிக்க வைப்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள இந்திய வான் விளையாட்டு அறிவியல் மையம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் இணைந்து கன்னியாகுமரியில் பாராசூட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. கன்னியாகுமரி கடற்கரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிறிது தூரம் பாராசூட்டில் பறந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவி மதுமிதா என்பவரும் சிறிது நேரம் பாரசூட்டில் பறந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பாராசூட்டில் நமது வாக்கு நமது உரிமை. ஓட்டை விலைக்கு விற்காதீர்கள் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மாணவ மாணவியர், ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவியர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீதாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாகச நிகழ்ச்சியை ஒட்டி கன்னியாகுமரி தீயணைப்பு படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவ மாணவியரிடம் உரையாற்றிய மாவட்ட கலெக்டர், மக்களிடம் தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.