கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய தடகள போட்டிகளில் கூலித்தொழிலாளியின் மகள் சாதனை படைத்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பாலாமடம் பகுதியை சேர்ந்தவர் சார்ஜின், கூலி தொழிலாளி. இவரது மகள் லிஃபோனா ரோசிலின் ஜின் (15). இவர் வாவறை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இந்த மாணவிக்கு சிறு வயதில் இருந்தே தடகள போட்டிகளில் ஆர்வம் தொற்றி கொண்டுள்ளது. மாணவி படிக்கும் பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் லாரன்ஸ் மாணவிக்கு தினமும் காலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் சிறப்பு பயிற்சிகள் வழங்கி வந்தார்.இதனையடுத்து 7 ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது மாவட்ட அளவிலான தடகள போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார். தொடர்ச்சியாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று குவித்தார்.மேலும் தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் மாணவிக்கு கிடைத்தது.
அதிலும் அவர் தனது கால் தடத்தை பதித்து முதல் முறையாக மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். தொடர்ந்து டெல்லியில் நடந்த 1000 மீட்டர் போட்டியில் தங்கம் வென்ற அவர் கோவாவில் நடந்த ஒரே போட்டியில் 400 மற்றும் 600 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு இரண்டு தங்க பதக்கங்களை வென்று சாதனை புரிந்தார்.இந்நிலையில் வருகிற 21 ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க உள்ளார்.அதிலும் தங்க பதக்கம் வென்று 5 வது முறை தேசிய அளவிலான தங்க பதக்கத்தை வாங்க வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆனால் மாணவி நன்றாக படித்தும் வருகிறார்.
வரும் காலத்தில் இந்திய நாட்டிற்காக விளையாடி நாட்டிற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பேன் என்றும் ஐபிஎஸ் ஆகி நாட்டிற்கு சேவை செய்வதே தனது வாழ்நாள் லட்சியம் என்று தெரிவித்தார். சாதனை படைக்க துடிக்கும் மாணவிக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.