கடலுக்குள் பிரச்சாரம்: ராகுல்காந்திக்கு அனுமதி மறுப்பு
படகில் இருந்து கரை திரும்பும் போது ஒரு சில பெண்கள் தவறி விழுந்தனர், அந்த பெண்களை மீனவர்கள் உடனடியாக மீட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாவட்டம் தோறும் தேர்தல் பரப்புரை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 3 நாள் பரப்புரைக்காக வந்திருந்த ராகுல்காந்தி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரப்புரையை முடித்துவிட்டு இன்று குமரி மாவட்டத்திற்கு வந்திருந்தார். குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதிக எழுச்சியுடன் மீனவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய மீனவர் வணக்கம் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்காக மீனவ மக்கள் படகுகளில் ஏற்றி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைத்து அவர்கள் மத்தியில் பிரம்மாண்ட படகில் நின்று ராகுல் குறைகளை கேட்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது, இதனால் கடலுக்குள் ராகுல்காந்தி செல்ல அனுமதிக்க முடியாது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ராகுலை சந்தித்து குறைகளை கூற வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மீனவ பெண்கள் விரக்தியில் திரும்பிச் சென்றனர். இந்த நிகழ்ச்சிக்காக மேள தாளங்கள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஏற்பாட்டாளர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.
இதனிடையே ஒரு சில மீனவ பெண்கள் படகில் இருந்து கரை திரும்பும் போது தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண்களை மீனவர்கள் அவசர அவசரமாக மீட்டனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.