திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் நினைவு தினம் அனுசரிப்பு

குமரியில் நீர் ஆதாரத்தை உருவாக்கிய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் நினைவு தினம் அனுசரிப்பு.;

Update: 2021-08-07 11:30 GMT

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராக விளங்கிய ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜா.

முந்தைய மன்னர் ஆட்சி காலத்தில் குமரி மாவட்டத்தை உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராக விளங்கியவர் ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜா.

இவரது காலகட்டத்தில் தபால், கல்வி, சட்டம், சிவில் சர்வீஸ் துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சியை உருவாக்கியும், பெண்கள் கல்விக்கும், அனைத்து தரப்பு மக்களும் கல்வி கற்கவும் வழிவகை செய்யப்பட்டது.

குமரியில் முதன் முதலாவதாக பொது போக்குவரத்தை துவக்கி வைத்து திருவனந்தபுரத்திற்கு இணையாக நாகர்கோவிலையும் வளர்ச்சியடைய செய்தவர் மன்னர் ஸ்ரீ மூலம்திருநாள் மகாராஜா. அதோடு குமரி மாவட்டத்தில் விவசாயத்தில் வளர்ச்சியடைய செய்து முக்கிய நீராதாரமாக விளங்கும் பேச்சிப்பாறை அணையை உருவாக்கினார்.

மேலும் திற்பரப்பு பகுதியில் கோதையாற்றின் மேல் இரும்பு பாலம், பரளியாற்றின் மேல் திருவட்டாறு பாலம் உட்பட நம் பகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்கள் பல இவர் ஆட்சி காலத்தில் உருவானது. இந்தியாவில் முதல் முதலாக ஆட்சி அதிகாரத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு பங்களிப்பை வழங்கிய மன்னர் ஸ்ரீ மூலம்திருநாள் மகாராஜா.

பேச்சிப்பாறை அணை கட்டுமானத்தில் திறமையுடன் உழைத்த பொறியாளர் அலக்ஸான்டர் மிஞ்சன் அவர்களின் மறைவிற்கு பின், அணை வளாகத்திலே உடல் அடக்கம் செய்து, கல்லறை எழுப்பி மரியாதை செலுத்தியது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இவர் 1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மரணமடைந்தார். அவரது நினைவு நாளையொட்டி பேச்சிப்பாறை, குலசேகரம் பகுதி பொதுமக்கள் இன்றளவும் அவர்களது வீடுகளில் உள்ள மன்னரின் புகைபடங்கள் மூலம் மன்னர் ஸ்ரீ மூலம்திருநாளின் நினைவுதினம் அனுசரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News