புதுக்கடை அருகே சாலையில் திடீர் ராட்சத பள்ளம்: விபத்தை தடுத்த பொதுமக்கள்

புதுக்கடை அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் விபத்து ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் தடுப்புகளை வைத்தனர்.

Update: 2022-03-08 02:45 GMT

புதுக்கடை அருகே கிள்ளியூரில் சாலையின் நடுவே ஏற்பட்ட ராட்சத பள்ளம்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் இருந்து கருங்கல் செல்லும் சாலையின் அடியில் விளாத்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு குளச்சல் பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இந்த சாலைகளில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு வாகன போக்குவரத்து இடையூறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று கிள்ளியூர் பகுதியில் சாலையின் நடுவே திடீரென ராட்சத பள்ளம் உருவானது.

மேலும் சாலை துண்டிக்கப்பட்டு உள்ளே உள்ள குழாய் உடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறியது. அதிர்ஷ்டவசமாக அப்போது வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனிடையே இந்த சாலை வழியாக மண்டைக்காடு கோவிலுக்கு ஏராளமான மக்கள் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேராளாவில் இருந்தும் வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சாலைகளின் இரண்டு பகுதிகளிலும் சிறிய வகை கம்புகள் கற்கள் வைத்து தடுப்புகள் அமைத்து வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர். சாலை துண்டிக்கப்பட்டு ஒரு மணி நேரம் கடந்த பின்னரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, காவல்துறையினரோ இந்த பகுதிக்கு வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டியதோடு தொடர்ந்து இந்த சாலையில் கள ஆய்வு செய்து தரமான சாலைகளை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News