கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இன்று திங்கள்கிழமை முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் திருட்டு மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் திருட்டு மது விற்பனை தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 மற்றும் காவல்துறை ஹெல்ப்லைன் 7010363173 என்ற எண்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் எனவும், புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே திருட்டு மது விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.