காவல்துறை உதவி ஆய்வாளர் மீதான பாலியல் வழக்கு: அறிக்கை அளிக்க எஸ்.பி உத்தரவு
குமரியில் காவல்துறை உதவி ஆய்வாளர் மீதான பாலியல் வழக்கை விசாரித்து அறிக்கை அளிக்க ஏ.டி.எஸ்.பிக்கு எஸ்.பி உத்தரவு.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பளுகள் பகுதியை சேர்ந்த 32 வயதான இளம்பெண் ஒருவர் பளுகள் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் என்பவருடன் நட்பு ஏற்பட்டது, இந்த நட்பை பயன்படுத்தி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் அந்த இளம்பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார். ஆனால் புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளாததால் நீதிமன்றத்தின் மூலம் உத்தரவு பெற்று அதன்படி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் மட்டுமின்றி கருக்கலைப்பின் ஈடுபட்டதாக டாக்டர் கார்மல் ராணி உட்பட 8 பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் ஜாமீன் பெற்றதற்கு காவல்துறையினர் உடந்தையாகச் செயல்பட்டதாக குற்றம்சாட்டி அந்த இளம்பெண் கடந்த 16ம் தேதி நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் இடமிருந்து சைபர் கிரைம் ஆய்வாளர் வசந்திக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். இந்நிலையில் இவ்வழக்கு குறித்த விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு ஏ.டி.எஸ்.பி.க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கத்திற்கும் சம்மன் விரைவில் அனுப்பப்பட உள்ளதாகவும் தொடர்ந்து வழக்கில் ஏனைய நபர்களிடம் விசாரணை நடைபெறும் எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.