குண்டும் குழியுமாக மாறிய சாலை, விபத்துகள் அதிகரிப்பதால் சீரமைக்க கோரிக்கை
குமரியில் குண்டும் குழியுமாக மாறிய சாலையில் விபத்துகள் அதிகரிப்பதால் போர் கால அடிப்படையில் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தை கேரளாவோடு இணைக்கும் மிக முக்கிய சாலையாகவும் 24 மணி நேர போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகவும் காணப்படுகிறது கண்ணுமாமூடு பளுகல் சாலை.
மாவட்டத்தின் எல்லை பகுதியில் உள்ளதால் இந்த சாலை சீரமைக்கபடாமல் சாலையின் நடுவே படு பயங்கரமான பள்ளங்கள் உருவாகி சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது.
இதனிடையே இந்த சாலையில் இரவு நேரங்களில் வரும் இரு சக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துகள் ஏற்பட்டு தொடர் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் மழை காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சாலை குளம் போல் காட்சி அளிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சாலை வழியாக அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
சாலையை சீரமைக்க ஊர்மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் பலமுறை மனு அளித்தும் யாரும் கண்டுகொள்ள வில்லை என குற்றம் சாட்டும் பொதுமக்கள் சாலையை சீரமைக்காவிட்டால் அதிக படியான உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் அதனை தடுக்க போர்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.