ஆயுதபூஜை: குமரியில் பூக்களின் விலை பல மடங்கு உயர்வு
நவராத்திரியை முன்னிட்டு குமரியில் பூக்களின் விற்பனை மற்றும் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
பராசக்தியை வணங்கும் நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா, நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. பூஜைக்கு முக்கிய தேவைகளில் ஒன்றான பூக்களின் விலை மற்றும் விற்பனை பலமடங்கு அதிகரித்து உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மலர் சந்தையான தோவாளை மலர் சந்தையில், மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள பூக்களை தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
அதன்படி இன்று நடைபெற்ற சிறப்பு மலர்ச் சந்தையில் கடந்த வாரம் வரை கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகைப்பூ, தற்போது 800 ரூபாய்க்கும் கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பிச்சிப்பூ 1250 ரூபாய்க்கும் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாடாமல்லி 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேபோல் செவ்வந்தி, கனகாம்பரம், அரளி, ரோஜா, மரிக்கொழுந்து உள்ளிட்ட அனைத்து மலர்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. விலை அதிகரித்தாலும் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதனை வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.